மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம் கவர்னர் பேச்சு


மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம் கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 3 Oct 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

மற்ற மாநிலங்களை விட தமிழகம், கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

கும்பகோணம்,


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்தார். அப்போது அவர் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் இளையராஜா, ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு திப்பிராஜபுரம் கிராமத்துக்கு சென்று, அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாமா சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறைகளுக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன், அறங்காவலர் ராம்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பின்னர் கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் நடந்த விழாவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற 4 பேருக்கு பாராட்டு சான்றிதழும், தலா ரூ.25 ஆயிரம் பரிசும் வழங்கினார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகி செண்பகராமன்பிள்ளையின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் திப்பிராஜபுரம் கிராமத்தை பாமா சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை தத்தெடுத்து கொள்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து திட்ட செயல்பபாடுகளை தொடங்கி வைத்தார். மேலும் திப்பிராஜபுரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:–


தஞ்சை மாவட்டம் கலை, கலாசாரத்துக்கு பெயர் பெற்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருவையாறு கர்நாடக இசைக்கு பெயர் பெற்ற ஊர். நான் இந்தியாவில் மராட்டியம், அசாம், மேகாலயா ஆகிய இடங்களில் வேலை பார்த்துள்ளேன்.

தற்போது தமிழ்நாட்டில் கவர்னராக உள்ளேன். இங்கு இதுவரை 25 மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளேன். என்னுடைய பயண அனுபவத்தில் பார்க்கும்போது மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்த மாநிலம்.


தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்காக வாரத்துக்கு 2 மணி நேரம் வீதம், ஆண்டுக்கு 100 மணி நேரம் ஒதுக்கி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பாரதிமோகன் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தினமலர் ஆசிரியர் டாக்டர் ராமசுப்பு, கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால், கிராமிய திட்ட ஆலோசகர் கீதாராஜசேகர், அன்பழகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரின் முதன்மை செயலாளர் ஸ்ரீதரன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் பொன்ராஜ் தேவர், நகர தலைவர் சோழராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கவர்னர் வருகையையொட்டி கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story