பழனியில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் சந்தைக்கு ‘சீல்’ வைப்பு


பழனியில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் சந்தைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 7:04 PM GMT)

பழனியில், அனுமதியின்றி செயல்பட்ட தனியார் சந்தைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பழனி, 

பழனி-இட்டேரி சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காய்கறி மார்க்கெட் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக அந்த மார்க்கெட் மூடப்பட்டது. அதையடுத்து விவசாயிகள் பழனி-சுப்ரமணியபுரம் சாலையில் மானிபக்காடு பகுதியில் செயல்படும் தனியார் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு, விவசாயிகள் வந்து செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் காய்கறி மார்க்கெட் மானிபக்காடு சந்தையிலேயே செயல்பட்டு வந்தது. இதையடுத்து அந்த மார்க்கெட்டை குத்தகைக்கு எடுத்தவர், தனக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தார்.

மேலும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அனுமதியின்றி சந்தை நடத்தக்கூடாது என தனியார் சந்தை நிர்வாகிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் சந்தையை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

அதன்படி நேற்று சப்-கலெக்டர் அருண்ராஜ், நகராட்சி ஆணையாளர் நாராயணன், தாசில்தார் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அதிகாரிகள், அனுமதியின்றி செயல்பட்ட தனியார் சந்தையை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் ‘சீல்’ வைக்கப்பட்ட சந்தைக்குள் வெளிநபர்கள் யாரும் நுழையாமல் தடுப்பதற்காக சந்தையை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் இட்டேரி ரோட்டில் செயல்படும் காய்கறி சந்தைக்கு தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்தனர்.

சந்தைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறித்து அதன் நிர்வாகிகள் கூறுகையில், ஐகோர்ட்டு கிளை தீர்ப்பில் சந்தைக்கு ‘சீல்’ வைக்க வேண்டும் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஐகோர்ட்டு மதுரை கிளையில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளோம். விரைவில் சந்தையை மீட்போம்’ என்றனர். 

Next Story