கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி


கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 9:12 PM GMT)

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.34 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நேற்று உளுந்தூர்பேட்டை தாலுகா வடகுரும்பூரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை எங்கள் கிராமத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் திருநாவலூரை சேர்ந்த ஒரு பெண் மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேர் என 5 பேர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலரை அணுகி எங்களது தொண்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் அரசு மூலமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றுத்தருவதாக கூறினர். இதை நம்பிய எங்கள் கிராமத்தை சேர்ந்த 17 பேர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த தொண்டு நிறுவனத்தில் தலா ரூ.2 லட்சத்தை செலுத்தினோம்.

ஆனால் பணம் செலுத்தி 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரை எங்களுக்கு கடன் பெற்றுத்தரவில்லை. நாங்கள் பலமுறை சென்று அவர்களிடம் கேட்டதற்கு அரசிடம் இருந்து இன்னும் பணம் வரவில்லை, பணம் வந்தவுடன் கடன் தொகை தருவதாக கூறி காலம் கடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் 5 பேரிடமும் சென்று நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி கேட்டோம். அதற்கு அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து எங்களை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எங்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.34 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இதுபோன்று அவர்கள் 5 பேரும் சேர்ந்து திருவண்ணாமலை, வேட்டவலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமும் பணம் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story