6 பெட்டிகள் இணைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை குமாரசாமி தொடங்கி வைத்தார்


6 பெட்டிகள் இணைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Oct 2018 5:24 AM IST (Updated: 5 Oct 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு இடையே 6 பெட்டிகள் இணைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தொடங்கி வைத்தார்.அத்துடன் புதிய நடைமேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் பையப்பனஹள்ளி முதல் மைசூரு ரோடு வரையும், நாகசந்திராவில் இருந்து எலேச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 வழித்தடத்தில் பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு இடையே இயங்கும் மெட்ரோ ரெயில்களில் அதிகளவில் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு இடையே 6 பெட்டிகளுடன் ஒரு மெட்ரோ ரெயில் கடந்த ஜூலை மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இன்னொரு மெட்ரோ ரெயிலிலும் 6 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

இதன் தொடர்ச்சியாக, மேலும் ஒரு மெட்ரோ ரெயிலிலும் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்த மெட்ரோ ரெயில் சேவையை நேற்று மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே உள்பட பலர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர், நாகசந்திரா அருகே உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் நடந்த ஆசிய தொழில் மாநாட்டில் கலந்து கொள்ள மெஜஸ்டிக்கில் இருந்து நாகசந்திரா வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மேயர் கங்காம்பிகே ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக, மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் பி.எம்.டி.சி. பஸ் நிலையங்களுக்கும், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் இடையே பயணிகள் சென்று வரும் வகையில் புதிதாக ரூ.1.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தையும் முதல்-மந்திரி குமாரசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Next Story