மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின்கட்காரியுடன் குமாரசாமி சந்திப்பு


மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின்கட்காரியுடன் குமாரசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 11:36 PM GMT (Updated: 5 Oct 2018 11:36 PM GMT)

டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், மேகதாதுவில் புதிய அணை கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதியதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கு விரிவான அறிக்கை தயாரித்து, திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவர் நேற்று மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது, மகதாயி நதிநீர் விவகாரம், கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து நிதின்கட்காரியுடன் ஆலோசனை நடத்தினேன்.

மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசின் அனுமதி எந்த நேரத்திலும் அதாவது விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்று (அதாவது நேற்று) நடந்த பேச்சுவார்த்தை எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கிய பிறகு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும்.

புதிய அணை கட்டும் விஷயத்தில் ஏற்கனவே அதிக காலம் விரயமாகிவிட்டது. கடலில் வீணாக கலக்கும் நீரை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். இது மிக அவசரமான தேவை ஆகும். நடப்பு ஆண்டில் நாங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 346 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை திறந்துவிட்டுள்ளோம்.

இதில் 200 டி.எம்.சி. அளவுக்கு நீர் கடலில் வீணாக கலந்தது. இந்த தண்ணீரை சேமித்திருந்தால், மழை குறைவாக பெய்யும்போது, அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம். இந்த அம்சங்களை மத்திய நீர்ப்பாசனத்துறை மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இதுகுறித்து அவர், மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவை பிறப்பித்துள்ளார். மகதாயி நதிநீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி இருக்கிறேன். இதற்கு சாதகமான பதிலை நிதின்கட்காரி கூறினார். தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள நெடுஞ்சாலைகளை சீரமைக்க உடனடியாக ரூ.250 கோடியை வழங்குமாறு கோரி இருக்கிறேன். 512 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.781 கோடி ஆகும்.

கர்நாடகத்தில் மழைக்கு மொத்தத்தில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சாலைகள் என மொத்தம் 2,910 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 419 பாலங்கள், 72 அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2,078 கோடி ஆகும்.

ஹாசன் மாவட்டத்தில் 2 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தேதியை முடிவு செய்யுமாறும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story