மாவட்ட செய்திகள்

நெய்வேலி அருகே : ஆசிரியை வீட்டில் ரூ.13½ லட்சம் நகை கொள்ளை + "||" + Near Neyveli: Rs 13½ lakh jewelry robbery at the teacher's house

நெய்வேலி அருகே : ஆசிரியை வீட்டில் ரூ.13½ லட்சம் நகை கொள்ளை

நெய்வேலி அருகே : ஆசிரியை வீட்டில் ரூ.13½ லட்சம் நகை கொள்ளை
நெய்வேலி அருகே ஆசிரியை வீட்டில் ரூ.13½ லட்சம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெய்வேலி, 


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே தில்லைநகர் சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் மணியன் மகன் சேகர் (வயது 61). ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மனைவி பனிமலர் (52). இவர் நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பி.டெக் படித்து முடித்துள்ள இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சேகர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று காலை சேகர் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்ப வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்கம் இருந்த கிரீல் கதவும், அதன் அடுத்து இருந்த மரக்கதவும் திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த சேகர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதை சோதனை செய்த போது பீரோவில் இருந்த 68 பவுன் நகைகளை காணவில்லை.

இது பற்றி சேகர் டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேகர் வீட்டை பூட்டிச் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க ‘கிரீல் கேட்’ பூட்டை உடைத்தனர். பின்னர், முன்பக்க மரக்கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மொத்த மதிப்பு ரூ.13½ லட்சமாகும்.

இதற்கிடையே இந்த வழக்கில் துப்புதுலங்க கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சேகர் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.