கணவர் வெளிநாடு சென்றதும் மாயம்; கள்ளக்காதலனோடு செல்ல அடம்பிடித்த இளம்பெண்


கணவர் வெளிநாடு சென்றதும் மாயம்; கள்ளக்காதலனோடு செல்ல அடம்பிடித்த இளம்பெண்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:00 AM IST (Updated: 11 Oct 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கணவர் வெளிநாடு சென்ற சில நாட்களிலேயே மாயமான இளம்பெண் காதலுடன் சென்ற சம்பவம் ஏர்வாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஆனந்தபிரகாஷ். இவருக்கும் சிலையப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த நளாயினி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆனந்த பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து அவரது மனைவி நளாயினி திடீரென மாயமானார்.

இதுபற்றி பெண்ணின் பெற்றோர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் நளாயினி சின்ன ஏர்வாடியை சேர்ந்த வாலிபர் வெண்நிலவன் என்பவருடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் ஏர்வாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரையொருவர் காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால் அப்பெண்ணுக்கு பெற்றோர் வெறொருவருடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதன்பின்னர் கள்ளக்காதலர்களாக இருவரும் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஏர்வாடி போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுடன் பெண்ணை அனுப்பி வைக்கும்படி கூறினர். ஆனால் நளாயினி அதற்கு மறுப்பு தெரிவித்து காதலுடன் தான் செல்வேன் என்று உறுதியாக தெரிவித்து விட்டார். இதனால் அந்த பெண்ணை அவரது காதலருடன் போலீசார் அனுப்பி வைத்து விட்டனர்.

இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் கூறும்போது, சம்பந்தப்பட்ட பெண் 21 வயதை கடந்தவர். அவர் காதலித்த வாலிபருடன் தான் செல்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் பெற்றோருடன் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்தார். இதனால் வேறு வழியின்றி அவரது காதலனுடன் அனுப்பி வைக்க நேரிட்டது என்று தெரிவித்தார். சமீபத்தில் கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story