கள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டில் நகை திருட்டு ; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டில் நகை திருட்டு ; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2018 3:15 AM IST (Updated: 12 Oct 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 51), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றதும், அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், பாண்டுரங்கனை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டுரங்கன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்து விலை உயர்ந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லை.

இதுபற்றி பாண்டுரங்கன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திருட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டுரங்கன் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தொலைக்காட்சி பெட்டி மற்றும் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. திருடு போன நகை மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story