கோவை கரும்புக்கடையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை, பணம் திருட்டு
கோவை கரும்புக்கடையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது.
போத்தனூர்,
கோவை கரும்புக்கடை வள்ளல்நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது55). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்னை சென்றார். அவரது வீட்டின் அருகே சகோதரி வீடு உள்ளது. இந்நிலையில் சாகுல் அமீது வீட்டிற்கு மின்விளக்கை போடுவதற்காக நேற்று இரவு அவருடைய சகோதரி சென்றார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில், வீட்டில் இருந்து 65 பவுன் தங்கநகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் பதிவாகி இருந்த திருட்டு ஆசாமிகளின் கைரேகை உள்ளிட்ட தடயங்களை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.