ரேஷன் கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் சாலைமறியலில் ஈடுபட்ட 80 பேர் கைது


ரேஷன் கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் சாலைமறியலில் ஈடுபட்ட 80 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2018 11:00 PM GMT (Updated: 17 Oct 2018 7:30 PM GMT)

நாகையில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் வழங்குவது. மருத்துவப்படியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்குவது. 4 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்துவது என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று 3-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாகை அவுரித்திடலில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா, இணை செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து ரேஷன் கடை பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர். 

Next Story