ராணுவ வீரர் கண்முன்னே மனைவி-மகள் பலி : தேனி அருகே பரிதாபம்


ராணுவ வீரர் கண்முன்னே மனைவி-மகள் பலி : தேனி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 19 Oct 2018 9:30 PM GMT (Updated: 19 Oct 2018 10:58 PM GMT)

தேனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மனைவி, மகள் ஆகியோர் ராணுவ வீரர் கண்முன்னே லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 54). இவர், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜூலியட்மெர்சி ஞானகுமாரி (44). இவர், மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் (13), தெஸ்கிமரியம் (10) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். தெஸ்கிமரியம் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஏசுதாஸ் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நிலக்கோட்டையில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தார்.

தேனியை கடந்து திண்டுக்கல்-குமுளி சாலையில் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் கிடந்த மணலால் மோட்டார்சைக்கிள் சறுக்கியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 4 பேரும் தவறி கீழே விழுந்தனர். ஏசுதாசும், இளைய மகள் தெஸ்கிமரியமும் சாலையோரம் இடதுபுறம் விழுந்துள்ளனர். ஜூலியட்மெர்சி ஞானகுமாரியும், மூத்த மகள் ஜனட்ஸ்வீட்டி பிரின்சசும் வலதுபுறம் சாலையில் விழுந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் அந்த வழியாக வந்த லாரி ஏறி, இறங்கியது. இதில் அவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் ஏசுதாசும், தெஸ்கிமரியமும் காயம் அடைந்தனர். தனது கண்முன்னே மனைவியும், மகளும் இறந்ததை கண்டு ஏசுதாஸ் அலறி துடித்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து லாரி டிரைவரான வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (48) மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story