கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்


கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ ஆலயங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக அரசு நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டிற்கு (2018-19) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். ஆலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். ஆலயத்தின் பெயரில் ஆலயம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-3) அளிக்க வேண்டும்.

சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட ஆலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். பழமையான ஆலயங்கள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 வருடங்கள் வரை ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை ரூ.2 லட்சமும், 20 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பழமையான ஆலயங்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பபடிவத்தை பிற்சேர்க்கை 1 -3-ல் உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bc-m-b-c-mw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ ஆலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும். நிதி உதவி இரு தவணைகளாக ஆலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story