பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேர் கைது


பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2018 10:30 PM GMT (Updated: 24 Oct 2018 9:17 PM GMT)

பாலக்கோடு அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு, 


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்டாளம்மன் கோவில் பின்புறம் உள்ள ஒரு புதரில் கடந்த 13-ந் தேதி பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாலக்கோடு தக்காளி மண்டி அருகில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் பாலக்கோடு அருந்ததியர் காலனியை சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் கூறியதாவது:- தனது முதலாவது மனைவி சாலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டார். அதன்பின்னர் துர்காதேவி (35) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன்.

ஜோதிடர் ஒருவரிடம் ஜோதிடம் பார்க்க சென்ற போது துர்காதேவியின் உடலில் நாக மச்சம் இருப்பதாகவும், அதனால் தனக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது எனவும் அவர் கூறினார். இதனால் நான், துர்காதேவியை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சகில் (23), அம்ருதின்(22), பாலக்கோட்டை சேர்ந்த சாதிக்பாட்சா(24) ஆகியோரிடம் ரூ.1½ லட்சம் தருவதாக கூறி எனது மனைவியை கொலை செய்யுமாறு கூறினேன்.

அதன்படி அவர்கள் கடந்த 11-ந் தேதி இரவு என் வீட்டிற்கு வந்தனர். துர்காதேவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் 3 பேரும் சேர்ந்து எனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் நாங்கள் உடலை சாக்கு மூட்டையில் கட்டி பட்டாளம்மன் கோவில் பின்புறம் உள்ள ஒரு புதரில் வீசி சென்றோம். மறுநாள் நான் அங்கு சென்று துர்கா தேவியின் உடலை தீயிட்டு எரித்து விட்டு தப்பி ஓடி விட்டேன். தற்போது பாலக்கோடு சுடுகாடு அருகில் சகில் உள்பட 3 பேரும் நிற்கின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்க சென்ற போது தான் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து போலீசார் பாலக்கோடு சுடுகாடு பகுதிக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த சகில், அம்ருதின், சாதிக்பாட்சா ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் பெண்ணை எரித்து கொலை செய்த மூர்த்தி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story