மண்டியா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும்படி அறிவுரை


மண்டியா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும்படி அறிவுரை
x
தினத்தந்தி 24 Oct 2018 11:33 PM GMT (Updated: 24 Oct 2018 11:33 PM GMT)

ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற மறுப்பு தெரிவித்த நிலையில் மண்டியா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றன.

காங்கிரஸ் பல்லாரி மற்றும் ஜமகண்டி ஆகிய தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி சிவமொக்கா, மண்டியா மற்றும் ராமநகர் ஆகிய தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பா.ஜனதா 5 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

சித்தராமையா ஆலோசனை

ஆனால் மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை ஆதரித்து பணியாற்ற மாட்டோம் என்று அறிவித்தனர். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அங்கு சென்று, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால், கருத்து வேறுபாடுகளை மறந்து ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளை மந்திரி கேட்டுக் கொண்டார். இதை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மண்டியாவுக்கு வந்தார். அங்கு அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இதில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செலுவராயசாமி, ரமேஷ் பன்டிசித்தேகவுடா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சித்தராமையா, மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை

மண்டியா மாவட்ட காங்கிரசார் தேர்தல் பணியாற்றவில்லை என்று கூறுவது தவறு. இன்று(நேற்று) நடைபெற்ற கூட்டத்திற்கு எங்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் வந்தனர். ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள். இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மதவாத கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இது புனிதமற்ற கூட்டணி என்று சொல்ல பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது. அங்கு தேர்தலுக்கு பிறகு அந்த கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு வகித்தது. அதே போல் பீகாரிலும் புனிதமற்ற கூட்டணி பா.ஜனதா அமைத்துக் கொண்டு எங்கள் கூட்டணியை அக்கட்சி விமர்சிக்கிறது.

நல்ல நாட்கள் வரவில்லை

அரசியல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நீர் அல்ல. இது ஓடும் தண்ணீரை போன்றது. காங்கிரஸ் தனது கொள்கையில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது. நல்ல நாட்கள் வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நல்ல நாட்கள் வரவில்லை. பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் நிலை உள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. இதற்கு இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்ததே காரணம் ஆகும்.

இதற்கு பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் ஆகும். பண மதிப்பு நீக்க திட்டத்தின் மூலம் சீர்திருத்தத்தை கொண்டு வருவதாக மோடி சொன்னார். கருப்பு பணம் வெளியே வரும் என்று அவர் கூறினார். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. மோடி மக்களை ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தேர்தல் பணியாற்ற முடிவு

சித்தராமையா ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் ஒரே மேடையில் தோன்றினர். இதனால் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்த அக்கட்சிகளின் நிர்வாகிகள் அதை மறந்து ஒன்றாக தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

Next Story