8 வழி சாலை தொடர்பாக தீர்மானம் கொடுத்தால் கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் பதிவு செய்ய மறுக்கின்றனர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
8 வழி சாலை தொடர்பாக தீர்மானம் கொடுத்தால் கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகள் பதிவு செய்ய மறுக்கின்றனர் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
இதில் வேளாண்மை துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை என அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
சாத்தனூர் அணையின் இடது கால்வாய் வழியாக உபரிநீர் துரிஞ்சலாறு வழியாக செல்கின்றது. இதற்கிடையில் நந்தன் கால்வாய் திட்டம் அமைக்க அரசு பல ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நந்தன் கால்வாய் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கலசபாக்கம் பகுதியில் காட்டு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பன்றிகளால் ஏராளமான பயிர் சேதம் ஏற்படுகிறது. இதற்கு உரிய இழப்பீடு தொகை கிடைப்பதில்லை. அதனால் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்க வேண்டும்.
விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க தாலுகா அளவில் தாசில்தார் தலைமையிலும், வருவாய் கோட்டம் அளவில் உதவி கலெக்டர் தலைமையிலும், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும் மாதத்திற்கு ஒருமுறை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. உதவி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவதே இல்லை. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் சில அரசு பஸ்சில் ஏறினால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பயண அட்டை செல்லாது என்று கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பரமனந்தல் பகுதியில் மேல் நிலைப்பள்ளி பராமரிப்பின்றியும், போதிய கழிவறை வசதியின்றியும் காணப்படுகிறது. அதனால் அந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடமும், கழிவறையும் கட்டித்தர வேண்டும்.
கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை தொடர்பாக தீர்மானம் கொடுத்தால் அதனை அதிகாரிகள் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை அருகில் மலப்பம்பட்டு என்ற கிராமத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அதிநவீன சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. 2003-2004-ம் ஆண்டில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு உண்டான பாக்கி ரூ.6 கோடி இதுவரை நிலுவையில் உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதுவும் நிலுவையில் உள்ளது.
30-ந் தேதி மரபுசாரா எரிசக்தி துறை சார்பில் ஆலையை பல பகுதிகளாக உடைத்து எடுக்க ஏலம் விடப்படுகிறது. இந்த ஆலை இயங்கினால் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். எனவே கலெக்டர், இதில் கவனம் செலுத்தி எங்களுக்கு சேர வேண்டிய கரும்பு தொகைக்கும், ஏலத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதற்கிடையில் விவசாயிகள் சிலர் போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் பதில் அளித்தபோது, விவசாயி ஒருவர் குறுக்கிட்டு கரும்பு நிலுவை தொகை கிடைக்காமல், நாங்கள் குடும்பத்துடன் அவதிப்படுகின்றோம். தீபாவளி செலவிற்குகூட பணம் இல்லை. தீபாவளிக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் நான் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்து விடுவதாக ஆவேசமாக கூறினார்.
பின்னர் கலெக்டர் கந்தசாமி பேசுகையில், சர்க்கரை ஆலையில் இருந்து ரூ.11 கோடியே 60 லட்சம் வழங்க வேண்டி இருந்தது. தற்போது சுமார் ரூ.6 கோடி வழங்கி உள்ளனர். இன்னும் ரூ.5 கோடியே 60 லட்சம் வழங்க வேண்டி உள்ளது. 20 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்த இடத்தில் படிப்படியாக குறைத்து 718 விவசாயிகளுக்கு மட்டுமே நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. மீதியுள்ள பணம் தீபாவளிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
Related Tags :
Next Story