போலி ஆவணங்கள் தயாரித்து தொழிலாளி பெயரில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி - கைதான வங்கி பெண் மேலாளர் மீது மேலும் ஒரு புகார்
திண்டுக்கலில் போலி ஆவணங்கள் தயாரித்து தொழிலாளி பெயரில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி செய்து கைதான வங்கி பெண் மேலாளர் மீது மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன் உள்பட 7 பேர், கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், எங்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.3 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வங்கி மேலாளர் சொர்ணபிரியாவை கைது செய்தனர்.
இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த பழனிவேல் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு செருப்பு கடையில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறேன். கடந்த 4-12-2017 அன்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினேன். அப்போது வங்கி மேலாளராக இருந்த சொர்ணபிரியா என்பவர் சில கையெழுத்துகளை வாங்கினார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு புதிய வங்கி மேலாளர் கீர்த்திகா என்பவர் என்னை அழைத்து உங்கள் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் கடன் பெறப்பட்டுள்ளது, என்றார். எனக்கு கடன்பெற தகுதியும் இல்லை, கடன்பெற விண்ணப்பிக்கவும் இல்லை என்பதால், இதுசம்பந்தமாக மேலாளரிடம் விசாரித்தேன். அப்போது, முன்னாள் வங்கி மேலாளர் சொர்ணபிரியா மூலம் ரூ.20 லட்சம் கடன் பெறப்பட்டு, 4 பேரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே, எனது பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலாளர் சொர்ணபிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி உரிய விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story