தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 487 நலவாழ்வு மையங்கள் திறப்பு - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 487 நலவாழ்வு மையங்கள் திறப்பு - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2018 10:45 PM GMT (Updated: 28 Oct 2018 6:58 PM GMT)

கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 487 நலவாழ்வு மையங்கள் திறக்கப்படவுள்ளன என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிவகங்கை,

நாலுகோட்டை கிராமத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் நலவாழ்வு மையம் திறப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மந்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

 அரசு மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய ஒருங்கிணைந்த உயர் சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மக்கள் நலவாழ்வு மையத்தினை தொடங்க பாரத பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 487 நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மாங்குடி மற்றும் நாலுகோட்டை துணை சுகாதார நிலையத்திலும் மக்கள் நலவாழ்வு மையம் செயல்படவுள்ளது.

2019–ம் ஆண்டில் மாவட்டத்தில் 23 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 21 துணை சுகாதார நிலையங்களிலும் மக்கள் நலவாழ்வு மையம் செயல்பட உள்ளது. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியர் பணியமர்த்தப்பட்டு வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:–

 ஒவ்வொருவரும் நோய் நொடியின்றி வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்துத் தந்தவர் ஜெயலலிதா. அவர் வழியில், தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்துறைக்கு தனிக்கவனம் எடுத்து பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்.

இந்த மாவட்டம் விவசாயிகள் சார்ந்த பகுதியாகும். குறிப்பிட்டத்தக்க தொழில் வளம் இல்லை. மேலும் தொழில் வளம் உருவாக்கி கொடுத்திட மத்திய மந்திரி உதவிட வேண்டும். கிராபைட் நிறுவனம் முழுமையாக செயல்பட மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும்.

சிவகங்கை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கும், ரெயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 6 பேருக்கு காசோலைகளையும், ஊட்டச்சத்து பெட்டகம் 3 பேருக்கும், அரசு மருத்துவமனையில் பிரசவித்த 2 தாய்மார்களுக்கு காசோலைகளையும், முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவி இதய குறைபாடு உள்ள 3 குழந்தைகளுக்கு சிகிச்சை செலவிற்கு காசோலைகளையும், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு உபகரணங்களும், தேசிய நல இயக்கத்தின் தொற்றா நோய்கள் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன.


Next Story