வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி சாவு


வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 29 Oct 2018 3:55 AM IST (Updated: 29 Oct 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேட்டவலம்,

வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்டவலத்தை அடுத்த நெய்வானத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணிசேகர் (வயது 60). அதே கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பூசாரியாக இருந்தார். இந்த கோவிலின் எதிரே சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் இளவரசன் என்பவர் அந்த பணியை மேற்கொண்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மணிசேகர் கோவிலின் முன்வாசல் அருகே தேங்கியிருந்த மழைநீரை சாலை வழியாக வெளியேற்றினார். அப்போது அருகில் இருந்தவர்களிடம் புதிய சாலை போட்டதால் தான் மழைநீர் தேங்கியது என கூறினார். அப்போது அந்த வழியாக வந்த இளவரசனின் மாமனார் மணிவண்ணன், மணிசேகரிடம் ஏன் என் மருமகனை பற்றி தவறாக பேசுகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிவண்ணன் திடீரென அவரை வயிற்று பகுதியில் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தார். மேலும் போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story