குன்னத்தூர் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி பிணமாக கிடந்த பரிதாபம்; போலீசில் மனைவி புகார்


குன்னத்தூர் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி பிணமாக கிடந்த பரிதாபம்; போலீசில் மனைவி புகார்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் அருகே பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளி காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.

குன்னத்தூர்,

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செட்டிக்குட்டை கிராமம் மேட்டுவலசை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 29). இவருடைய மனைவி தேவி (23). இவர்களுக்கு தட்சனி (6), கீர்த்தி (4½) என்ற 2 மகள்களும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

மூர்த்தி சித்தாண்டிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த பனியன் நிறுவனத்தை குன்னத்தூரை அடுத்த செங்காளிபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (30) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த தீபா (40) ஆகியோர் சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.இந்த பனியன் நிறுவனத்திற்கு தினமும் காலையில் 8 மணிக்கு வேலைக்கு செல்லும் மூர்த்தி வேலை முடிந்து இரவில்தான் வீடு திரும்புவார். சில நாட்கள் வேலை முடிந்ததும் மது குடித்து போதையில் இருக்கும் மூர்த்தி வீட்டுக்கு போகாமல் காலையில்தான் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28–ந் தேதி காலையில் வழக்கம் போல் பனியன் நிறுவனத்திற்கு மூர்த்தி வேலைக்கு சென்றார். அதன்பின்னர் காலை 9 மணிக்கு மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற 2 பேர் அங்கு இருந்த மூர்த்தியின் மனைவி தேவியிடம் ‘‘ உங்கள் கணவர் இன்று வேலைக்கு வரவில்லை’’ என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டனர். இதனால் தேவி, தனது கணவர் மது குடித்து விட்டு எங்காவது இருப்பார், மதுபோதை தெளிந்தவுடன் வீட்டிற்கு வந்துவிடுவார் என நினைத்தார்.

இந்த நிலையில் குன்னத்தூர் அருகே வலையபாளையம் பிரிவு காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்க தக்க ஒருவர் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரித்தனர். இதையடுத்து அங்கு பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் அவருடைய பெயர், முகவரி குறித்து விசாரிக்க செல்போன் ஏதும் உள்ளதா? என்று தேடிப்பார்த்தனர். அப்போது சட்டை பையில், இருந்த துண்டுச்சீட்டில் சித்தாண்டிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தின் பெயர் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பனியன் நிறுவனம் சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு வந்த மூர்த்தியின் மனைவி தேவியும், ‘‘ 28–ந் தேதி காலையில் வழக்கம் போல் எனது கணவர் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. எனவே அவர் வேலைக்கு சென்றாரா? அல்லது வேறு எங்கு சென்றாரா? அவர் நிலை என்ன? என்று விசாரிக்க வந்தேன் என்றார்.

இதையடுத்து காட்டிற்குள் பிணமாக கிடந்தவர் மூர்த்தியா என்று அடையாளம் காட்டுவதற்கு போலீசார், தேவியை அங்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு பிணமாக கிடந்தவர் எனது கணவர் மூர்த்திதான் என்று தேவி அடையாளம் காட்டினார். அப்போது மூர்த்தியின் காலில் காயம் இருந்துள்ளது. இதை பார்த்து தேவி, கதறி அழுதார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மூர்த்தியின் உறவினர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மூர்த்தியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பனியன் நிறுவனத்திற்கு சென்ற மூர்த்தி இறந்து விட்ட நிலையில் அது குறித்து போலீசாருக்கோ, உறவிருக்கோ தகவல் தெரிவிக்காமல், அவருடைய உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து காட்டுப்பகுதியில் வீசியது ஏன்? மேலும் மூர்த்தியின் காலில் காயம் இருப்பதால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று குன்னத்தூர் போலீசில் தேவி புகார் செய்தார். இது குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து மூர்த்தி உடல் நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மர்மமான முறையில் மூர்த்தி இறந்த சம்பவம் அவருடைய உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story