சிங்கம்புணரி பெரியாறு கால்வாய்க்கு வந்த வைகை தண்ணீர்
சிங்கம்புணரியில் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில், வைகையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வைகை தண்ணீரை பெரியார் நீட்டிப்பு கால்வாய் முலம் வழங்க அரசாணை பிறப்பித்த நிலையில் கடந்த 22–ந்தேதி மதுரை மாவட்டம் புலிப்பட்டி மதகுகளில் இருந்து சிங்கம்புணரி வழியாக திருப்பத்தூர், ஏரியூர் வரை பெரியார் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. 20 நாட்களுக்கு மட்டும் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை கூவான மலை மற்றும் கோட்டமலை இடையே கீழ் சந்தி கண்மாய்க்கு வந்தடைந்தது.
இந்தநிலையில் கால்வாய்களில் ஆங்காங்கே உள்ள அடைப்புகளையும் வளர்ந்து உள்ள கருவேல மரங்களையும் எந்திரம் முலமாகவும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டும் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து காளாப்பூரை சேர்ந்த சுடர்தேவன், உதயகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது, விவசாயம் செழிக்கக்கூடிய விவசாய பூமியான இந்த பகுதி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த ஏதுவாக இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் பெரியார் அணையில் இருந்து, வைகைக்கு வரும் நீர் இந்த பகுதியில் உள்ள பெரியார் நீட்டிப்பு கால்வாய் மூலம் கொண்டு வரப்பட வேண்டும்.
மேலும் ஆண்டு தோறும் பெரியாறு நீட்டிப்பு கால்வாயை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பெரியார் அணையில் இருந்து வைகை அணை வழியாக மதுரை மாவட்டத்திற்கு செல்லும் தண்ணீர் கடந்த காலங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பயன்பட்டது.
தற்போது விளை நிலங்கள் வீடுகளாக மாறி விட்ட நிலையில் அந்த பகுதிக்கு செல்லும் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே பெரியார் நீட்டிப்பு கால்வாயிற்கு வரும் தண்ணீர் அளவை கூட்டி கூடுதலாகவும், 20 நாட்களுக்கு பதில் 40 நாட்கள் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் பெரியார் நீட்டிப்பு கால்வாயில் ஆங்காங்கே உள்ள அடைப்புகளால் கருங்காலக்குடி பகுதியில் வீணாகி வருகிறது.
எங்கள் பகுதியில் உள்ள சிங்கம்புணரி, காளாப்பூர், நாட்டார் மங்கலம், சுக்காம்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கூட்டு முயற்சியாகவும், பொதுப்பணித் துறை மற்றும் கலெக்டர் ஒத்துழைப்புடன் பெரியார் அணை நீர் வைகை அணை மூலம் கிடைத்துள்ளது. தற்போது விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பெரியார் அணை நீர் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.