கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் - கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் - கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சேலத்தில் நேற்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம், 


பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 1.1.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும், இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தொலைத்தொடர்பு துறை எங்களை அழைத்து பேசவில்லை.

இதனால் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி உள்ளோம். மத்திய மந்திரி கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்க வேண்டிய தொலைத்தொடர்பு துறை இது தொடர்பாக கடந்த 8 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல், நிறுவனத்தில் பணியாற்றும் 1.85 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும், ஓய்வு பெற்றுள்ள 3.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 67 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்து 287 செல்போன் கோபுரங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அந்த கோபுரங்களை பராமரிக்க ரூ.1,800 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடன் வழங்கியதாக பல கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நஷ்டம் அடைந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் லாபத்தை நோக்கி தான் பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்கிறது.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) சேலம் சீரங்கபாளையம் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டமும், அடுத்த மாதம் 14-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலமும் நடக்கிறது. அதன்பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நவம்பர் 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story