வந்தவாசி அருகே நடந்த சம்பவத்தில் திருப்பம்: நண்பரை கொன்று குளக்கரையில் வீசிவிட்டு தப்பிய 2 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
வந்தவாசி அருகே வாலிபரை கொன்று குளக்கரையில் வீசிவிட்டு தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள மும்முனி கிராமத்தில் உள்ள நல்லதண்ணீர் குளக்கரையையொட்டி உள்ள பகுதியில் கடந்த 25-ந் தேதி வாலிபர் ஒருவர் காலில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவருக்கு 20 வயதுக்கு மேல் இருக்கும். அவரது சாவில் மர்மம் இருந்தது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனையில் அந்த வாலிபரை யாரோ கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இது தொடர்பாக வந்தவாசி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், மகாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வந்தவாசி தாலுகா கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 25) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் வந்தவாசி தெற்கு போலீசார் நேற்று முன்தினம் மாலை வந்தவாசி 5 கண் பாலம் அருகில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் இருவரும் வந்தவாசி அருகே உள்ள விளாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தவேல் (35), வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (25) என்பது தெரியவந்தது.
மோட்டார்சைக்கிளை ஆய்வு செய்தபோது அந்த மோட்டார்சைக்கிள் கொலை செய்யப்பட்ட கமல்ராஜிக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கமல்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சாந்தவேல், சாமுவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நண்பர்களான கமல்ராஜ், சாந்தவேல், சாமுவேல் ஆகிய 3 பேரும் கடந்த 21-ந்தேதி கிருஷ்ணாபுரம் கூட்டுச் சாலை அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது மயங்கிய சாந்தவேலிடம் இருந்து ரூ.4ஆயிரத்து 500-ஐ கமல்ராஜ் திருடிச் சென்றாராம். பின்னர் கடந்த 24-ந்தேதி 3பேரும் சேர்ந்து ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகில் மது அருந்தியுள்ளனர். அப்போது கமல்ராஜிடம் பணம் குறித்து சாந்தவேல் கேட்டுள்ளார். இது தொடர்பாக நடந்த தகராறில் சாந்தவேல், சாமுவேல் ஆகியோர் சேர்ந்து கமல்ராஜின் காலில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் மயங்கிய கமல்ராஜை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து மும்முனி குளக்கரை பகுதியில் போட்டு விட்டு இருவரும் தப்பிவிட்டனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான சாந்தவேல், சாமுவேல் ஆகிய இருவரையும் வந்தவாசி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் நிலவரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story