பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 70 போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 70 போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி
x
தினத்தந்தி 4 Nov 2018 3:45 AM IST (Updated: 4 Nov 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் 70 போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர்களாக போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் இருந்து தலா 4 போலீசாரும், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பேர் என மொத்தம் 34 போலீசாருக்கு 2 நாள் வரவேற்பாளர் பயிற்சி பெரம்பலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார். கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரெங்கராஜ், தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சியினை டாக்டர் புவனேஷ்வரி, அரசு வக்கீல் கலா ஆகியோர் அளித்தனர். பயிற்சி தொடக்க விழாவில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர், ஜெயங்கொண்டம் உட்கோட்ட அனைத்து போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். இதையொட்டி முதல் நிலையாக 16 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் தலா 2 போலீசார், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலிருந்து தலா 2 போலீசார் என மொத்தம் 36 போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அளிக்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், உளவியல் நிபுணர் டாக்டர் சிவசக்தி, குழந்தை நல பாதுகாப்பு உறுப்பினர் கண்ணையன், குழந்தை நல பாதுகாப்பு உறுப்பினரும், சட்ட ஆலோசகருமான பகுத்தறிவாளன் மற்றும் பாதுகாப்பு அலுவலர் இருதயராஜ் ஆகியோர் போலீசாருக்கு வரவேற்பாளர் பயிற்சி அளித்தனர். மேலும் பயிற்சி தொடக்க விழாவில் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்-அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரவேற்பாளர் பயிற்சி முடித்த போலீசார் அந்தந்த காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வரவேற்பாளர் பணியில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story