அனுமதி இன்றி பட்டாசு விற்பனை பெட்டிக்கடைக்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு


அனுமதி இன்றி பட்டாசு விற்பனை பெட்டிக்கடைக்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-04T22:35:37+05:30)

நீலகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு விற்றதாக பெட்டிக் கடைக்காரர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊட்டி, 

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்டாசு கடைகள் வைக்க வருவாய், போலீசார், தீயணைப்பு படையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் பல இடங்களில் பட்டாசு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவுக்கு புகார்கள் வந்தன.

இதையொட்டி அனுமதி பெறாமல் பட்டாசு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஊட்டி, குன்னூர், மஞ்சூர் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சூர் அருகே எடக்காடு பகுதியில் அனுமதி இன்றி ஒரு பெட்டிக்கடையில் பட்டாசு விற்றது தெரிய வந்தது. பின்னர் கடை உரிமையாளர் ராஜசேகர் (வயது 34), கரியமலை பகுதியை சேர்ந்த பிரபு (34) ஆகியோர் மீது அனுமதி இன்றி பட்டாசு விற்றதாக மஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் நடுஹட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் (63), குன்னூரை சேர்ந்த சூரி (60) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story