தாய் கண்முன்னே பரிதாபம்: சாலையை கடக்க முயன்ற சிறுவன் லாரி மோதி பலி


தாய் கண்முன்னே பரிதாபம்: சாலையை கடக்க முயன்ற சிறுவன் லாரி மோதி பலி
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-05T01:45:04+05:30)

தாய் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவரது மனைவி சரோஜினி. மகன் பார்க்கவன் (வயது 4). சரோஜினி தனது மகனுடன் பெரியநாகலூர் கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பெரியநாகலூர் அருகே வந்த போது அப்பகுதியில் வசித்து வரும் பார்க்கவனின் பெரியம்மா இங்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதைபார்த்த பார்க்கவன் தனது தாயின் கையை உதறிவிட்டு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக அரியலூரிலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக பார்க்கவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தாயின் கண்முன்னே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்த சரோஜினி மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளதால் நூற்றுக் கணக்கான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அதிகவேகத்துடன் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகளால் இயக்கப்படும் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இதே சாலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு டிப்பர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். அப்போதும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது சிறுவன் டிப்பர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகளால் இயக்கப்படும் லாரிகள் அதிகவேகத்துடன் செல்வதை தடை செய்ய வேண்டும். மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இவ்விதமான உயிரிழப்புகள் அவ்வப்போது நடைபெறுவதை தடுக்க முடியாது என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம், கயர்லாபாத், உடையார்பாளையம் போலீசார் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் பார்க்கவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story