ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் - கூடுதல் டி.ஜி.பி.யிடம் கோரிக்கை


ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் - கூடுதல் டி.ஜி.பி.யிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 9:45 PM GMT (Updated: 5 Nov 2018 10:48 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் ரெயில் பாதைகளில் நடைபெறும் விபத்து மற்றும் குற்றவியல் சம்பவங்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வசதியாக ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையை சீரமைக்க ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர், 


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெயில்பாதை மற்றும் ரெயில் நிலையங்களில் நடைபெறும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்ரெயில்வே போலீசாரும் தூத்துக்குடி ரெயில்வே போலீசாரும் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள கவுசிகமாநதி ரெயில்வே பாலத்தில் விபத்து நடந்தால் தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொள்ளவேண்டி உள்ளது.

இதே போன்று விருதுநகர் அருகே உள்ள மீசலூர் அருகே ரெயில்பாதையில் நடைபெறும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது. விருதுநகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளிக்குடி அருகே ரெயில்பாதையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக திருமங்கலம் ரெயில்வே போலீசார் விசாரணை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் நடவடிக்கை எடுப்பதில் மிகுந்த தாமதம் ஏற்படுக்கிறது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரெயில்பாதையில் நடைபெறும் சம்பவம் தொடர்பாக 100 கி.மீ. தூரத்தில் இருந்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வந்து விசாரணை நடத்த வேண்டிஉள்ளதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதுடன் வழக்கு விசாரணை தொடர்பான தடயங்களையும் பதிவு செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதேபோன்று விருதுநகர் திருத்தங்கல் இடையே உள்ள ரெயில்பாதையில் விருதுநகரில் இருந்து 5 கி.மீ. உள்ள தூரத்தில் நடைபெறும் விபத்து மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணைக்கு வரவேண்டிஉள்ளது. இதனால் உரிய முறையில் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதுடன் சில நேரங்களில் ரெயில் போக்குவரத்திலும் பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது.

ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையை சீரமைத்தால் வழக்கு விசாரணைகள் தாமதமின்றி நடக்க வாய்ப்பு ஏற்படும். விருதுநகர் மாவட்டத்திற்கு தெற்கே மாவட்ட எல்லை வரையிலான ரெயில்பாதையை விருதுநகர் போலீஸ் விசாரணை எல்லையுடனும் விருதுநகர் திருத்தங்கல் இடையேயான ரெயில்பாதையை விருதுநகர் ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையுடன் இணைத்தால் இப்பகுதி ரெயில்பாதைகளில் நடைபெறும் விபத்து மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக விருதுநகர் ரெயில்வே போலீசார் தாமதமின்றி விசாரிக்க வசதி ஏற்படும்.

விருதுநகர் கள்ளிக்குடி ரெயில்நிலையம் இடையேயான பகுதியை விருதுநகர் ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லையுடன் இணைப்பது தாமதமில்லாத விசாரணைக்கு வழிவகுக்கும்.

எனவே ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. இந்த ரெயில்வே போலீஸ் விசாரணை எல்லை குறித்து உரிய ஆய்வு செய்து விபத்து மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பாக தாமதமில்லாமல் விசாரணை செய்து முடிக்கும் வகையில் விசாரணை எல்லையை மாற்றிஅமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story