வேடசந்தூரில்: ஓட்டலுக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி ஊழியர் மீது தாக்குதல் - பிடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு


வேடசந்தூரில்: ஓட்டலுக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி ஊழியர் மீது தாக்குதல் - பிடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் ஓட்டலுக்குள் புகுந்து மாற்றுத்திறனாளி ஊழியரை மற்றொரு ஓட்டல் உரிமையாளர் தாக்கினார். பின்னர் அவரை பிடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

வேடசந்தூர், 

வேடசந்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுமணி (வயது 44). மாற்றுத்திறனாளி. இவர் வேடசந்தூர்-பழனி சாலையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் கடந்த 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேடசந்தூர்-வடமதுரை சாலையில் முருகேசன் என்பவருடைய ஓட்டலில் வேலுமணி வேலைக்கு சேர்ந்தார். இதனையறிந்த ராமகிருஷ்ணன், தனது நண்பர் சரவணனுடன் வேலுமணி வேலை பார்க்கும் ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அங்கு வாசல் முன்பு நின்று கொண்டு வேலுமணியை வெளியே வரும்படி இருவரும் அழைத்தனர். ஆனால் அவர் வராததால் அவர்கள் அந்த ஓட்டலுக்குள் புகுந்து வேலுமணியிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர் சட்டையை பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வேலுமணியை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி அந்த ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த வேலுமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலுமணி மீது கார் மோதியது. இதில் அவருடைய கால் முறிந்தது. அதற்கான மருத்துவ செலவுக்கு பணத்தை ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வேலுமணியின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனது ஓட்டலுக்கு வேலைக்கு வராமல் மற்றொரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றதால் ராமகிருஷ்ணன் ஆத்திரமடைந்து அவரிடம் தகராறு செய்தது தெரியவந்தது.

Next Story