விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல், 6 பேர் கைது


விருதுநகர், மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல், 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 4:15 AM IST (Updated: 8 Nov 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மற்றும் மதுரையில் ரூ.36 லட்சம் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் இதனை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 6 பேரை கைது செய்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 52). இவர் மூளிப்பட்டி அரண்மனை அருகே தீபாவளியையொட்டி சாலையோர துணி கடை போட்டு இருந்தார். இவரது கடைக்கு வந்து கொள்முதல் செய்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்தார். அந்தநோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த அப்துல்காதர் வேறு ரூபாய் நோட்டை தரும்படி கேட்டார். இதனால் அந்த வாலிபருக்கும், அப்துல்காதருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவரிடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு ஒன்று, ரூ.500 கள்ள நோட்டு-2, ரூ.200 கள்ள நோட்டு-1 ஆகியவை இருந்தது.

அவர் விருதுநகர் சூலக்கரை அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத் (வயது26) என தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடன் வந்த சூர்யா (27) என்பவரும் போலீசாரிடம் சிக்கினார். இவர்கள் இருவரும் செவல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் தங்களுக்கு கள்ளநோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் முருகன் (32) என்பவரையும் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையின் போது முருகன் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவர் தன்னுடன் திருத்தங்கலில் பிளம்பர் வேலை பார்க்க வந்ததாகவும், அவர் தன்னுடன் வேலை பார்த்த போது தன்னிடம் கள்ள நோட்டுகள் இருப்பதாகவும், அதை புழக்கத்தில் விட உதவிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் என்றும், இதனை தொடர்ந்து விருதுநகர் தெப்பம் அருகில் வைத்து தன்னிடம் ரூ.30 ஆயிரம் கள்ள நோட்டுக்களை கொடுத்ததாகவும் அந்த நோட்டுக்கள் சரியாக இல்லை என்று திருப்பி கொடுத்துவிட்டேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து திருவாசகம் மறுமுறை வந்து வேறு கள்ளநோட்டுக்களை ரூ.30 ஆயிரத்துக்கு தந்ததாகவும், அதில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ரூ.9 ஆயிரத்தை திருவாசகத்திடமே கொடுத்துவிட்டு கள்ளநோட்டுக்களை கோபிநாத், சூர்யா மூலம் புழக்கத்தில் விட முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் கொக்கலாஞ்சேரி திருவாசகத்திடம் விசாரணை நடத்தினர். இதில் திருவாசகம் தனக்கு எரிச்சநத்தம் அருகில் உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகோபால் (42) என்பவர் தெரியும் என்றும், அவர் தான் என்னிடம் இந்த கள்ள நோட்டுக்களை கொடுத்தார் என தெரிவித்தார். இதையடுத்து ராஜகோபாலை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் தான் தரகு தொழில் செய்வதாகவும், மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியை சேர்ந்த இளங்கோ (52) என்பவரை தனக்கு அறிமுகம் உண்டு என்றும், இளங்கோ தான் கள்ளநோட்டுக்கள் அச்சடித்துள்ளதாகவும், அதனை புழக்கத்தில் விட உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் ரூ.30 ஆயிரம் கள்ள நோட்டுக்களை கொடுத்ததாகவும், அதை தான் திருவாசகத்திடம் கொடுத்து புழக்கத்தில் விட கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து போலீசார் துவரிமானை சேர்ந்த இளங்கோவின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது அவரது வீட்டில் ரூ.36 லட்சத்து 800-க்கான ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 ஆகிய கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் பிரிண்டர், கலர் மை பாட்டில்கள், கண்ணாடி மற்றும் 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இளங்கோவிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகிய 2 பேரும் தன்னிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் இரிடியம் உலோகம் தருவதாகவும், அதனை அதிக விலைக்கு விற்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனை அடுத்து ராஜகோபாலுடன் சேர்ந்து இரிடியத்தை தேடி அலைந்தேன். அது பயன் இல்லாமல் போகவே கள்ளநோட்டு அச்சடிக்க முடிவு செய்தேன்.

இதற்காக மதுரையில் உள்ள ஒரு கடையில் ரூ.6 ஆயிரத்துக்கு கம்ப்யூட்டர் பிரிண்டர் வாங்கி கள்ளநோட்டு அச்சடிக்க தொடங்கினேன். கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு ராஜகோபாலை பயன்படுத்திக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீசார் கோபிநாத், சூர்யா, முருகன், திருவாசகம், ராஜகோபால், இளங்கோ ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த கும்பல் ஒன்று விருதுநகர் செவல்பட்டியை மையமாக கொண்டு கள்ளநோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ற போது போலீசாரிடம் சிக்கியது. அந்த கும்பலுக்கும் தற்போது சிக்கிய கும்பலுக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பரபரப்பான தீபாவளி வியாபாரத்தின்போது கள்ள நோட்டுடன் வந்த வாலிபர் கோபிநாத் போலீசாரிடம் சிக்கவில்லை என்றால் இந்த கும்பல் அதிக கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். கோபிநாத், சூர்யா, முருகனிடம் இருந்து ரூ.33 ஆயிரத்து 150 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.36 லட்சத்து 33 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது.

Next Story