தீபாவளி பண்டிகை: பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்


தீபாவளி பண்டிகை: பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:00 PM GMT (Updated: 7 Nov 2018 8:12 PM GMT)

ஈரோட்டு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஈரோடு,

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்க நேர நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையிலும் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பட்டாசுகளை கோர்ட்டு குறிப்பிட்ட நேரத்தையொட்டி வெடித்தனர். இதுபோல் தீபாவளி புத்தாடை, இனிப்பு உறவினர்கள் சந்திப்பு என்று தீபாவளி களை கட்டியது.

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே ஈரோட்டில் புதிய ஆடைகள் வாங்கவும், வெடி மற்றும் பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதியது. இதனால் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து மணிக் கூண்டு செல்லும் பகுதிவரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திங்கட்கிழமை நள்ளிரவை தாண்டியும் கடை வீதி மற்றும் காந்திஜி ரோடு சென்டிரல் தியேட்டர் ஜவுளி மார்க்கெட் பகுதியிலும் ஆடைகள் வாங்க பொதுமக்கள் வந்து கொண்டே இருந்தனர்.

நேற்று முன்தினம் அதி காலையிலேயே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கின. காலை 6 மணி முதல் 7 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் அந்த நேரத்தில் ஏராளமானவர்கள் பட்டாசுகள் வெடித்தனர். பின்னர் புத்தாடைகள் அணிந்து வீட்டு பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.

பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் செய்த பலகாரங்கள், இனிப்பு ஆகியவற்றை தங்கள் நண்பர்கள், பிற மத நண்பர்களின் வீடுகளுக்கு நேரில் கொண்டு சென்று கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பலரும் இனிப்பு மற்றும் கார வகைகளை கடைகளில் இருந்தும் வாங்கி தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினார்கள். இதுபோல் மாலையில் பொதுமக்கள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.

ஈரோட்டில் வாழும் வடஇந்திய மக்கள் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் முன்பு தீபங்கள் ஏற்றி வைத்தனர். வீடுகளில் லட்சுமி பூஜை செய்து குடும்பத்தினர் அனைவரும் சாமியை வழிபட்டனர். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து வீதிகளில் பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினார்கள்.

தீபாவளியையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் போலீசார் தீவர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story