பெங்களூருவில் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் போலீசார் சோதனை ஐதராபாத்தில் பதுங்கல்


பெங்களூருவில் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் போலீசார் சோதனை ஐதராபாத்தில் பதுங்கல்
x
தினத்தந்தி 8 Nov 2018 5:00 AM IST (Updated: 8 Nov 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவான ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு, 

தலைமறைவான ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக கருதிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ.600 கோடி வரை பெற்று சையத் அகமது பரீத் என்பவர் மோசடி செய்திருந்தார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், பரீத் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியிடம் ரூ.20 கோடி பேரம் பேசிய பரீத், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை கொடுத்திருந்தார். இதுதொடர்பாக ஜனார்த்தன ரெட்டி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகி விட்டார்.

கடந்த 1-ந் தேதி ஜனார்த்தன ரெட்டி நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அதன்பிறகு, அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பல்லாரியில் நடந்த சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார். ஜனார்த்தனரெட்டி பல்லாரி மாவட்டத்திற்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வீட்டில் போலீசார் சோதனை

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தன ரெட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் கருதுகிறார்கள். இதனால் 4 தனிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்றுள்ளனர். அங்கு முகாமிட்டு ஜனார்த்தன ரெட்டியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு தனிப்படை போலீசார் பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டங்களில் முகாமிட்டு ஜனார்த்தன ரெட்டியை தேடி வருகிறார்கள். இதற்கிடையில், ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்த கோர்ட்டில் இருந்து போலீசார் அனுமதி பெற்றிருந்தனர்.

இதையடுத்து, நேற்று பெங்களூரு சாளுக்கியா சர்க்கிள் அருகே உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டிற்கு துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இருப்பினும் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது போலீசாருக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் பரீத் வழங்கிய 57 கிலோ தங்க கட்டிகள் போலீசாரிடம் சிக்கவில்லை. அந்த தங்க கட்டிகளை மீட்பதற்காக பெங்களூருவில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது.

உதவியாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

இதுபோல, ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளரான அலிகானுக்கு சொந்தமான பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள வீட்டிலும் நேற்று குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதற்கிடையில், நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க நகைகள் பெற்ற வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பெங்களூரு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு அலிகான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அலிகானுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபோன்று, ஜனார்த்தன ரெட்டி சார்பிலும் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய, அவரது வக்கீல்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story