உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை


உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2018 4:47 AM IST (Updated: 8 Nov 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உழவர் நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி. இவர் நேற்று மாலையில் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் அவரது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மக்கள் பிரச்சினை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கல்யாணசுந்தரத்துடன் சென்ற 2 பேரும் ஆத்திரம் அடைந்து நகராட்சி ஆணையர் கந்தசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்தவுடன் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நேற்று இரவு ரெயின்போ நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வீட்டின் முன்பு கூடிதரையில் அமர்ந்து இருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நகராட்சி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் நகராட்சி ஆணையரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி ஆணையர் அவரது வீட்டிற்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் உடனடியாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story