திண்டுக்கல்லில்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, பள்ளி மாணவன் சாவு


திண்டுக்கல்லில்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 5:41 PM GMT)

திண்டுக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை, 7-ம் வகுப்பு மாணவன் ஆகியோர் பலியாகினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே உள்ள எமக்கலாபுரத்தை சேர்ந்தவர் மணி மல்லான் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன்கள் பாலசுப்பிரமணி (20), யுவராஜ் (12). மற்றும் மகள் சிவகாமி (15).

இதில் யுவராஜ் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை நேற்று முன்தினம் காலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யுவராஜுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவன் மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டான். உடனே அவனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தான்.

குஜிலியம்பாறையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு வயதில் ஸ்ரீராம் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரங்கநாதன் தன்னுடைய குடும்பத்தினருடன் ரெட்டியார்சத்திரம் அருகே மேட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் குழந்தை ஸ்ரீராமுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக இரவில் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திண்டுக்கல்லில் ஒரே நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாசிடம் கேட்டபோது, மாணவன் யுவராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறவில்லை. மேலும் ஸ்ரீராம் என்ற குழந்தையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே இறந்துள்ளது. இதனால் அவர்களுக்கு என்ன காய்ச்சல் பாதிப்பு இருந்தது என்பது தெரியவில்லை, என்றார்.

Next Story