மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அறிவுறுத்தல்


மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-09T03:11:52+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர் சாகுபடி, காய்கறிகள் சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ராயக்கோட்டை மற்றும் காமன்தொட்டியில் குளிர் பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தக்காளி அதிக விளைச்சல் ஆகும் போது விலை குறைந்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விலை சரிவை சரி செய்ய தக்காளி பதப்படுத்தி ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப் படும்.

3 லட்சம் விதைகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் அரசன், வேம்பு, புங்கன், நாவல் அத்தி, செண்பகம் போன்ற மரங்கள் வளர்க்க 2 லட்சம் கன்றுகள் தயார் செய்து வழங்கப்படவுள்ளது. பொதுமக்களின் ஊட்டசத்து குறைபாட்டை போக்கும் வகையில் நாட்டு முறுங்கை விதைகள், நாட்டு பப்பாளி விதைகள் மொத்தம் 3 லட்சம் விதைகள் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெற்று பொதுமக்களுக்கு வழங்கப் படும்.

அதேபோல ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 26 பணிகளுக்கு பொதுமக்களுக்கு சாலை வசதி, கல்வெட்டு, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்தும் வகையில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் திட்டங்களை செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஷ்வரி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

Next Story