திருப்பூரில் கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகள், ஒர்க்‌ஷாப்புக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை


திருப்பூரில் கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகள், ஒர்க்‌ஷாப்புக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 10:45 PM GMT)

திருப்பூரில் கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகள் மற்றும் ஒர்க்‌ஷாப்புக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அபராதம் விதித்தார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் 12-வது வார்டு முருங்கபாளையம் பகுதியில் நேற்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திடீரென ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் வீடு, வீடாக சென்ற அவர் வீடுகளில் பாத்திரங்களில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உள்ளதா? என்று பார்வையிட்டார். மேலும் தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைக்க வேண்டாம் என்றும், தண்ணீர் உள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து 1-வது மண்டல உதவி ஆணையாளர் வாசுக்குமார் தலைமையில் சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியிலும், அதன் அருகில் உள்ள கார் ஒர்க்‌ஷாப்பில் உள்ள தொட்டியிலும் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டிற்கும், கார் ஒர்க்‌ஷாப்பிற்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 14-வது வார்டு பாட்டையப்பாநகரில் கொசுப்புழு கண்டறியப்பட்ட 4 வீடுகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story