கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Nov 2018 9:45 PM GMT (Updated: 2018-11-09T22:20:06+05:30)

4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்துக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

விழுப்புரம், 


விழுப்புரம்-புதுச்சேரி மற்றும் கடலூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிப்பாதை பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம்-புதுச்சேரி 4 வழிச்சாலைக்காக விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் கிராமத்தில் 100 வீடுகள் மற்றும் 4 கடைகளை கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக முதல்கட்டமாக 75 வீடுகளின் உரிமையாளர்களுக்கும், 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் கடந்த மாதம் 3-ந் தேதியன்று இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றும், கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் நேற்று மதியம் கெங்கராம்பாளையம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

கலெக்டரிடம் மனு

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

4 வழிச்சாலை பணிக்காக வீடுகள், கடைகளை கையகப்படுத்த அளவு எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். எவ்வித முன்அறிவிப்பின்றி 1 சதுர அடிக்கு எவ்வளவு தொகை, 1 சதுர மீட்டருக்கு எவ்வளவு தொகை என்று அறிவிப்பில்லாமல் வங்கிகளில் பணத்தை செலுத்திவிட்டனர்.

இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டபோது, 1 சதுர அடி ரூ.126.37-ம், 1 சதுர மீட்டர் ரூ.1,377.42-ம், நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. கெங்கராம்பாளையம் ஊராட்சி போன்று 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டமங்கலமும் ஊராட்சிதான். ஆனால் அங்கு 1 சதுரமீட்டர் ரூ.4 ஆயிரத்து 845 என்று 3½ மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒன்றியத்தில் ஊராட்சி நிலையில் உள்ள கண்டமங்கலம், கெங்கராம்பாளையம் ஆகிய 2 கிராமங்களில் வித்தியாசமாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது எந்த விதத்தில் நியாயம். தற்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துவிட்ட நிலையில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து 10 சதுர மீட்டர் கூட வீட்டுமனை வாங்க முடியாது. எனவே எங்களின் உணர்வுகளை புரிந்து, கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story