சிறுமி படுகொலையை கண்டித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சிறுமி படுகொலையை கண்டித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:54 PM GMT (Updated: 9 Nov 2018 11:54 PM GMT)

சிறுமி படுகொலையை கண்டித்து சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கணியன் பூங்குன்றன் தலைமை தாங்கினார்.

இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியை படுகொலை செய்த தினேஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், கொலையுண்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமி ராஜலட்சுமி படுகொலையை கண்டித்து மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத்தின் நிறுவனர் சார்ப் முரளி தலைமை தாங்கினார். இதில் கொலையுண்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், சிறப்பு கோர்ட்டு அமைத்து 60 நாட்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story