தமிழகத்தில் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
தமிழகத்தில் இனி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மு.க.ஸ்டாலின், சந்திராபாபு நாயுடு சந்திப்பு குறித்து எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பரபரப்பாக பேசுகின்றனர். இது பாராளுமன்றத்திற்கு தேர்தல் வரும் போது மட்டும் ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்யும் சந்திப்பு. இதில் ஒன்றும் அதிசயம் கிடையாது.
பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் பல்வேறு வியூகங்களை நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி, பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.
மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபுநாயுடு கூறுகிறார். நம் நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபுநாயுடு மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். அவர் பா.ஜ.க.வின் அலையை வைத்து தான் முதல்–அமைச்சர் ஆனார். அவருக்கு ஒரு பிரச்சினை, அவர் கேட்ட கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் வெளியேறி வந்துவிட்டார். இது அரசியலில் ஒவ்வொரு தலைவர்களும், கால சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும் நிலைப்பாடு தான்
மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் அவர்கள் நடத்தி வருகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் பல்வேறு காரணங்களை சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்ற தங்கதமிழ்செல்வன் கூறுவது தவறு. இந்த 2 வருடம் மட்டும் அல்ல, இனி தமிழகத்தில் எப்போதும், தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெறும்.
குழறுபடி செய்து தேர்தலை நிறுத்த முடியாது. அதை தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்காது. எளிமையான, மனிதாபிமானமிக்க ஒரு சாதாரண விவசாயி தான் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்–அமைச்சர் ஆகியிருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. விஜயகாந்த் உடல் நிலை சரியாகி, நன்றாக குணமாகி வரட்டும். தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கும் பதில் கூறப்படும்.
கமலஹாசன் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காண்பித்து விட்டு பிறகு பேச வேண்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் அவர் மீசையை முறுக்கி விட்டு பார்க்கிறார், அது எடுபடாது. மதுவை விற்பனையை நிறுத்தினால், புதுச்சேரி, கர்நாடகம் போன்று எங்காவது சென்று எதையாவது குடிப்பார்கள். மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.