பண்ணை குட்டைகள் அமைக்க மானியம் கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 500 பண்ணை குட்டைகள் மானியத்துடன் அமைக்கப்பட உள்ளன என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியள்ளதாவது:– பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று விளங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகஅரசு, காவிரி டெல்டா கடை மடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை ரூ.100 கோடி செலவில் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் 500 பண்ணைக் குட்டைகள் நூறு சதவீத மானியத்தில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. அதன் முதற்கட்டமாக 150 பண்ணைக் குட்டைகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மானியத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட உள்ளன.
எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள சிவகங்கை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிவகங்கை, தொண்டி ரோட்டில் (அரசு போக்குவரத்துப் பணிமனை அருகில்) உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற் பெரியாளர் அலுவலகத்திலும், தேவகோட்டை வருவாய் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரம் புகழேந்தி தெருவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சிவகங்கை உழவன் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்