மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புத்தன்காரவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41), தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஒழுகினசேரியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். பின்னர் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக சத்தம் போட்டார். அதிகாலை வேளை என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை. எனினும் சுரேஷ் தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டே இருந்தார்.

இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்தனர். அங்கு டிரான்ஸ்பார்மரில் நின்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை பார்த்தனர். உடனே அவர்கள் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேசை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

மனைவியுடன் தகராறு

இதற்கிடையே மின்சாரம் தாக்கி விபரீத சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டிக்க செய்தனர். இதைத் தொடர்ந்து சுரேசுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் கீழே இறங்கவில்லை. பின்னர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுரேசை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுரேஷ் கீழே குதித்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் வலை விரித்தனர். அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சுரேசை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சுரேசை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story