கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 5:37 PM GMT)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது என்று காங்கிரசார் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து ரெயில் நிலைய அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மகேஷ்லாசர், ராஜஜெகன், வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், செல்வராஜ் உள்பட பலர் நேற்று நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலைய அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு தினமும் வந்து சேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கேரள மாநிலம் கொச்சுவேளி வரை இயக்குவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இது குமரி மாவட்ட மக்கள் மற்றும் பயணிகளின் உரிமைகளையும், பயன்பாட்டையும் பெரிதும் பாதிப்படைய செய்யும். எனவே இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 14–ந் தேதி (அதாவது நாளை) காலை 10 மணி அளவில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மேலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு கொண்டு செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிடாவிட்டால் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

வழக்கம்போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை, சென்னையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு மட்டும் வந்து செல்வதுபோல இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்த வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கருப்பு சட்டையும், மற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர்.

Next Story