பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு நடைபெற்றது. பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் சிட்லிங் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந்தேதி உயிரிழந்தார். பாலியல் பலாத்காரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிட்லிங் கிராமமக்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக கலெக்டர் மலர்விழி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் காரணமாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுத்ததால் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மற்றொரு வாலிபர் ரமேஷ் சேலம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.


இந்த நிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனையை சிறப்பு டாக்டர்களை கொண்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை இணை பேராசிரியர் டாக்டர் தண்டர்சீப், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உடற்கூறு இயல்துறை டாக்டர் மதன்ராஜ், டாக்டர் அமிர்தா சுல்தானா ஆகியோர் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக வரவழைக்கப்பட்டனர்.

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு வந்த பா.ம.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மகேஷ்குமார், உதவி கலெக்டர் சிவன்அருள் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நேற்று மதியம் தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை வரை நீடித்தது.

அப்போது பாலியல் பலாத்காரத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காத போலீசாரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்ய வேண்டும். மாணவி தங்க வைக்கப்பட்ட காப்பகத்தில் சட்டவிதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பதை விசாரணை மூலம் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோரிடம் பிரேத பரிசோதனை நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் நேற்று இரவு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சிட்லிங்கிற்கு மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

Next Story