கூடங்குளம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய மீனவர் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்


கூடங்குளம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய மீனவர் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:15 AM IST (Updated: 13 Nov 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே பள்ளிக்கூடத்திற்குள் மீனவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கன்குளம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவ கிராமத்தில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூட காவலாளியின் மகன் நேற்று காலை பள்ளியில் எரிந்த மின்விளக்கை அணைப்பதற்காக வந்தார். அப்போது பள்ளிக்கூடத்துக்குள் தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு 23 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக பழவூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், கிராமமக்களும் பள்ளிக்கூடத்துக்கு வந்தார்கள். அங்கு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியதையும், உடல் அருகே பள்ளிக்கூட சுவரில் ரத்தத்தால் சிலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்ததையும் போலீசார் பார்வையிட்டனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் அதே பகுதியை சேர்ந்த சந்தியாகு ராயப்பனின் மகனான மீனவர் கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கிறிஸ்டோபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது கிறிஸ்டோபரின் உறவினர்கள், அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கிறிஸ்டோபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இந்த விசாரணையில், கிறிஸ்டோபர் அந்த பள்ளிக்கூட மாணவி ஒருவரை காதலித்ததாகவும், சமீபத்தில் அந்த மாணவியின் பெற்றோர் பழவூர் போலீசில் புகார் செய்ததன்பேரில் கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், கிறிஸ்டோபரின் தாயார் ஜெனால்டு கொடுத்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதற்கிடையே, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கிறிஸ்டோபர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய அவர், நேற்று காலை கூட்டப்புளி பள்ளிக்கூடத்துக்குள் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கிறிஸ்டோபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

மேலும், பள்ளிக்கூட சுவரில் சிலரது பெயர்களை ரத்தத்தில் எழுதியது அவர்தானா? அல்லது வேறு யாரேனும் எழுதினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடத்துக்குள் மீனவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story