2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிய கார்: ஓட்டல் ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம்
கொடைக்கானலில் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொடைக்கானல்,
கொடைக்கானலில் இருந்து மதுரை செல்லும் சாலையில் நேற்று இரவு ஒரு கார் அதிவேகமாக சென்றது. அப்போது சாலையில் சென்ற 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதி விட்டு, அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்களான ஆனந்தகிரியை சரவணன் (வயது 28), ஓட்டல் ஊழியர்கள் ராமச்சந்திரன் (27), ராபின் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 3 பேரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சரவணன் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே விபத்து பற்றி கேள்விபட்ட கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கார் குறித்து வயர்லெஸ் கருவி மூலம் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அந்த கார் மதுரை சாலையில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் ஜீப்பில், காரை துரத்தி சென்றனர். சுமார் 3 கி.மீ. தூரம் துரத்தி சென்ற நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காரை போலீசார் மடக்கினர். ஆனால், காரில் இருந்த 4 பேர் தப்பியோடி விட, ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story