சுதேசி–பாரதி மில் தொழிலாளர்கள் தலையில் முக்காடு போட்டு நூதன போராட்டம்
சுதேசி, பாரதி மில் தொழிலாளர்கள் தலையில் முக்காடு போட்டு நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுவை பாரதி, சுதேசி மில் தொழிலாளர்களின் சம்பளம், போனசை கவர்னர் கிரண்பெடி நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும் சுதேசி, பாரதி மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி பாரதி–சுதேசி மில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தபால் நிலையம் முன்பு நேற்று காலை கூடினார்கள். அங்கு அவர்கள் தலையில் முக்காடு போட்டு நூதனமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்க போராட்டக்குழு தலைவர் அபிசேகம் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் சண்முகம், ஜெயராமன் (என்.ஆர்.டி.யு.சி.), தங்கமணி, கிருஷ்ணன் (ஐ.என்.டி.யு.சி.), பெரியசாமி, காமராஜ் (ஏ.டி.யு.), ரத்தினசபாபதி, கல்யாணசுந்தரம் (ஏ.ஐ.டி.யு.சி.), தேவராசு, கோபிகா (சி.ஐ.டி.யு.) உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.