நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
21 மாத குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளனத்தின் தேசிய உறுப்பினர் தம்பிராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசு பஸ்களில் 50 சதவீதம் பயணச்சலுகை வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறக்கும் பட்சத்தில் ரூ.25 ஆயிரம் ஈமச்சடங்கிற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சங்கத்தின் செயலாளர் குழந்தைவேலு, பொருளாளர் வீரப்பன், துணை தலைவர்கள் பெரியசாமி, சுப்பிரமணியன், இணை செயலாளர்கள் ராமன், சவுகத் அலி உள்பட சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story