திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 4:15 AM IST (Updated: 16 Nov 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

தாளவாடி அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு வந்துகொண்டு இருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் உள்ள 26-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 10 மணி அளவில் வந்தபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றுவிட்டது.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. மேலும் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும், தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற லாரி மதியம் 12 மணி அளவில் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் செல்லத்தொடங்கின. திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

Next Story