திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2018 10:15 PM GMT (Updated: 15 Nov 2018 9:28 PM GMT)

திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விடுதியில் ஷாம்பு குடித்து தற்கொலைக்கு முயன்ற பயிற்சி மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்துள்ள பாய்லர் ஆலையில் தொழில் பழகும் விதத்தில் அப்ரண்டீஸ் மாணவர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பயிற்சி பெறுபவர்கள் தங்குவதற்காக திருச்சி- தஞ்சை சாலையில் பாய்லர் ஆலை கை சிலை அருகே விடுதி செயல்படுகிறது.

இந்நிலையில் பாய்லர் ஆலையில் அப்ரண்டீசாக திருவெறும்பூரை அடுத்த வடக்கு காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த அப்துல் ரபீக்கின் மகன் அப்துல்வாகித்(வயது 20) பயிற்சி பெற்று வந்தார். இவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அப்துல்வாகித் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்துல்வாகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இதேபோல் பாய்லர் ஆலையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று வருபவர் தூத்துக்குடியை சேர்ந்த முனியசாமி(வயது 20). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு போன் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனது அம்மாவிடம் ஆவேசமாக முனியசாமி பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விடுதி அறைக்குள் வைத்திருந்த தலைமுடியை சுத்தம் செய்யும் ஒரு வகையான ஷாம்புவை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் முனியசாமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த பாய்லர் ஆலை போலீசார், தூத்துக்குடியில் உள்ள முனியசாமி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாய்லர் ஆலையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும், மற்றொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் பாய்லர் ஆலை பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.


Next Story