தேர்தலில் வாக்குகளை பெறுவதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கிய கடமை தர்மபுரியில் தொல்.திருமாவளவன் பேச்சு
தேர்தலில் வாக்குகளை பெறுவதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கிய கடமையாகும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் வரவேற்று பேசினார். தொகுதி செயலாளர் சக்தி, சாக்கன்சர்மா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கலைவாணன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட துணைசெயலாளர் மின்னல் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் பணி முக்கியமானதுதான். ஆனால் அதை விட முக்கிய பணி ஒன்று இருக்கிறது. தேர்தலில் வாக்குகளை பெறுவதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது நமது முக்கிய கடமை ஆகும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகத்தை நமக்கு வழங்கி உள்ளது. ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்தியாவின் மிக உயர்ந்த ஜனநாயகத்தை மறுத்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த கோட்பாடுகளை நோக்கி மீண்டும் இந்த நாட்டை அழைத்து செல்ல முயற்சிக்கின்றன. ஜனநாயகத்திற்கு எதிராக நாட்டு மக்களை பிற்போக்குதனத்திற்கு மீண்டும் அழைத்து செல்லுகின்ற இந்த செயல்பாட்டை முறியடிப்பது மிகவும் அவசியமாகும்.
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாட்டில் உள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வருகிற டிசம்பர் 10–ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மண்டலசெயலாளர் நந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதிதமிழன், ஒருங்கிணைப்பாளர் கேப்டன்துரை, நாடாளுமன்ற தொகுதி துணைசெயலாளர் செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.