கஜா புயல் எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை


கஜா புயல் எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 8:55 PM GMT)

கஜா புயல் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

ஈரோடு,

கஜா புயல் காரணமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்திலும் பரவலாக மழை இருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் லேசான தூறலுடன் மழை தொடங்கியது. அவ்வப்போது வலுத்து பெய்தாலும் தொடர் சாரல் மழையாகவே இது காலைவரை நீடித்தது. பகல் 11 மணிவரை இந்த மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.

அதிகாலையிலேயே மழை இருந்ததால் புயலின் தாக்கம் ஈரோட்டிலும் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பு நேற்று காலை 7 மணிக்கு பின்னரே வெளியிடப்பட்டது. இதனால் அதுபற்றிய தகவல் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் சென்று சேரவில்லை. நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வழக்கம்போல வந்த மாணவிகள் பலர் அங்கு வந்த பின்னரே விடுமுறை அளிக்கப்பட்டதை அறிந்து திரும்பி சென்றனர். மழையில் குடையை பிடித்துக்கொண்டும், ஒரு குடையில் இருவர், மூவராகவும் வந்த மாணவிகள் விடுமுறை தகவல் அறிந்ததும் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்துகொண்டே வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

மழை காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. பாதாள சாக்கடை திட்டம், மின்சார கேபிள் இணைப்பு பணி உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு மீண்டும் சாலை செப்பனிடப்படாத ரோடுகளில் மழை நீர் சேறாக தேங்கி இருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.

பிற்பகல் நேரத்தில் மழை இல்லாமல் இருந்தாலும் வானம் மப்பும் மந்தாரமுமாக கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. பட்டப்பகலில் கடும் வெயிலை அனுபவித்து வந்த ஈரோடு மக்கள் நேற்று குளு குளு கால நிலையை அனுபவித்தனர்.

இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னத்தம்பிபாளையம், முனியப்பன்பாளையம், ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது இந்த மழை விடிய விடிய விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் அந்தியூர், சின்னத்தம்பிபாளையம், நல்லூர், ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் பீடி சுற்றும் தொழில்களும் பாதிக்கப்பட்டது.

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 11 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சிவகிரி புதிய பஸ் நிலையம், மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டும் கடை வைத்திருந்தனர். இதனால் நேற்று மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தாளவாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. குறிப்பாக திம்பம் மலைப்பாதையிலும் சாரல் மழை பெய்தது.

மேலும் மலைப்பகுதியில் கடும் பனிமூட்டமும் நிலவியது. மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்கினார்கள். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். ஆசனூர், கேர்மாளம், தலமலை பகுதிகளில் சாரல் மழை பெய்ததோடு, குளிர்ந்த காற்றும் வீசியது.

பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பவானி அருகே சித்தார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு மரம் வேரோடு சாலையோரத்தில் சாய்ந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலையோரத்தில் மரம் சாய்ந்தாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

கோபி, பெருந்துறை, கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், சென்னிமலை, கொடுமுடி உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. மேலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டதோடு குளிர்ந்த காற்றும் வீசியது.

இந்த மழையால் எந்த ஒரு பாதிப்பும் ஈரோடு மாவட்டத்தில் இல்லை என்று கலெக்டர் அலுவலக தரப்பில் கூறப்பட்டது.


Related Tags :
Next Story