மண்டபம் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை


மண்டபம் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
x
தினத்தந்தி 17 Nov 2018 3:59 AM IST (Updated: 17 Nov 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

பனைக்குளம்,

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் பலத்த மழையுடன் பாதிப்புகள் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் கடந்த 8–ந்தேதி அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த புயல் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மண்டபம் யூனியன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களை யூனியன் ஆணையாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாறு பாம்பன், சுந்தரமுடையான், அழகன்குளம், பனைக்குளம், தேர்போகி, வேதாளை, இருமேனி, என்மனங்கொண்டான், பிரப்பன்வலசை ஆகிய ஊராட்சிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மண்டபம் தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலு என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு காற்றின் வேகத்தில் சேதமடைந்தது. தர்காவலசை கிராமத்தில் கடல் உள் வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் பலத்த காற்று வீசியதும் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து தர்கா கட்டிடம் வரை கடல் நீர் உட்புகுந்தது.

இதேபோல உச்சிப்புளி– நாகாச்சி இடையே ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.


Next Story